Saturday, October 17, 2026|
Home/Local/அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

E
Editor
|12 May 2026 at 10:03

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் நன்மையடையும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள், மாற்று ஆதரவுத் திட்டங்கள் மூலம் தற்போது நிலையான வருமானத்தைப் பெறத் தொடங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் (2027-2029) படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளிலிருந்து அக்குடும்பங்களை விடுவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நீண்டகாலமாக அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளில் தங்கியிருப்பதைத் தவிர்த்து, மக்களைத் தற்சார்பு பொருளாதார நிலைக்குக் கொண்டுவருவதே அரசின் நோக்கமாகும்.பல குடும்பங்களின் வருமான நிலை இன்னும் போதுமான அளவு அதிகரிக்கவில்லை என்பதால், அவர்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்த முடியாதுள்ளது.


தற்போது முன்னேற்றம் கண்டுள்ள 100,000 குடும்பங்கள் பின்வரும் வழிகள் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றன. சுயதொழில் நடவடிக்கைகளுக்கான நிதி உதவி மற்றும் மானியங்கள். சிறிய அளவிலான கோழிப் பண்ணைகளை அமைப்பதற்கான ஆதரவு.

ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள். தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான வழிகாட்டல்கள் ஆகியவற்றின் மூலம் இவை முன்னெடுக்கப்படுகின்றன.

அஸ்வெசும திட்டம் 2023 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இடைக்காலப்பிரிவு (2,500 ரூபாய்), பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் (5,000 ரூபாய), ஏழைகள் (7,500 ரூபாய்) மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் (15,000 ரூபாய்) என நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்டன.

Tags:Local